மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முதல் முறையாக பிசிசிஐ அறிமுகம் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதுவரை ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு முதல் மகளிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை 2023 - 2027 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் ஊடக உரிமைகளை கைப்பற்றியதற்கு வையாகாம்-18 நிறுவனத்திற்கு வாழத்துக்கள்.
பிசிசிஐ மற்றும் மகளிர் பிசிசிஐ மீது உங்களது நம்பிக்கைக்கு நன்றி. வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடி வழங்கியுள்ளது. ஒரு போட்டிக்கு ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி வழங்கியுள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரியது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்று பிசிசிஐயும் டுவிட்டரில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஊடக உரிமையை வையாகாம்-18 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது. ஆனால், இதுவரை ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அனைத்து வகையான லீக் கிரிக்கெட் தொடர்களின் அடிப்படையில் ஐபிஎல் தொடருக்கு அடுத்த இடத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் ஒரு போட்டிக்கான உரிமத்தை விட ரூ.5 கோடி கூடுதலாகும்.
- IPL - கிரிக்கெட் - ஒரு போட்டிக்கு ரூ.107.5 கோடி
- WIPL - மகளிர் ஐபிஎல் - ஒரு போட்டிக்கு ரூ.7.09 கோடி
- PSL - கிரிக்கெட் - ஒரு போட்டிக்கு ரூ.2.44 கோடி