ஆஷஸ் 2023: கீப்பரின் சாமார்த்தியத்தால் விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!

Updated: Sun, Jul 02 2023 20:04 IST
Image Source: Google

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து  தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி மற்றும் ஒல்லி போப் ஆகியோர் தலா 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் பாட் கம்மின்ஸின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களைச் சேர்த்தது. இன்று ஆட்டத்தின் ஐந்தாவது நாள் தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் டக்கட் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து களத்தில் நின்றார். இந்த நிலையில் அடுத்து விளையாட வந்த ஜானி பேர்ஸ்டோ தனக்கு வீசப்பட்ட ஒரு பவுன்சர் பந்துக்கு குனிந்து விளையாடிவிட்டு, கீப்பரைத் திரும்பி பார்க்காமல், அப்படியே கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார். 

இந்த நேரத்தில் மிகச் சாதுரியமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டெம்புக்கு பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். இங்கிலாந்து அணி அதிர்ச்சி அடைய நடுவர்கள் அவுட் குறித்து அலச ஆரம்பித்தார்கள். இறுதியில் பந்து கீப்பரிடம் இருக்கும் பொழுது, நடவடிக்கை முழுமை அடைந்திருக்காத பொழுது, பேட்ஸ்மேன் வெளியேறுவதை தெரிவிக்காமல் வெளியேறினால், அந்த நேரத்தில் ரன் அவுட் செய்யலாம் என்கின்ற விதியின் கீழ் அவுட் கொடுத்தார்கள்.

 

இதனால் வெறும் பத்து ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதே சமயத்தில் இந்த ரன் அவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையாக சமூக வலைதளத்தில் உருவாகி இருக்கிறது. மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை