விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது தமிழ்நாடு!
நடப்பாண்டிற்கான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - ஹிமாச்சல பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியின் ஜெகதீசன், அபாரஜித், சாய் கிஷோர், முருகன் அஸ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - பாபா இந்திரஜித் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின்னர் இவரும் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திரஜித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த தினேஷ் கார்த்திக் சதமடித்து அசத்தினார்.
இதையடுத்து 103 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 116 ரன்களைச் சேர்த்திருந்த தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தனார். அடுத்து வந்த ஷாரூக் கான் 21 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்களைச் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 49.4 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்களைச் சேர்த்தது. ஹிமாச்சல் அணி தரப்பில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரிஷி தவான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.