விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், ஷாருக் அதிரடி; கர்நாடகாவுக்கு 355 ரன்கள் இலக்கு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் பாபா அபாரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெகதீஷன் - சாய் கிஷோர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த சாய் கிஷோர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் சதமடித்து அசத்தினார். பின் 102 ரன்களில் ஜெகதீசன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், இந்திரஜித்,வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். ஆனாலும் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாருக் கான் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு வானவேடிக்கைக் காட்டினார்.
இதன்மூலம் 25 பந்துகளில் அரைசதம் கடந்த ஷாருக் கான், 39 பந்துகளில் 6 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசி 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்களைச் சேர்த்தது. கர்நாடகா அணி தரப்பில் பிரவின் தூபே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.