ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!

Updated: Sun, May 25 2025 17:20 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆயூஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தன. இதில் ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் உர்வில் படேல் இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் உர்வில் படேல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த கையோடு டெவான் கான்வேவும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.

Also Read: LIVE Cricket Score

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், ஷாரூக்கான், ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை