விஜய் ஹசாரே கோப்பை 2023: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஹரியானா!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற் ஹரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யுவ்ராஜ் சிங் ஒரு ரன்னிலும், ஹர்ஷித் ராணா 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அன்கித் குமார் - கேப்டன் மெனரியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்கித் குமார் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 88 ரன்களிலும், கேப்டன் மெனரியா 70 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அங்கித் சௌத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் ராம் மோகன் ஒரு ரன்னிலும், மஹிபால் லம்ரோர் 2 ரன்களிலும், கேப்டன் தீபக் ஹூடா ரன்கள் ஏதுமின்றியும், கரன் லம்பா 29 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஜீத் தோமர் - குனால் சிங் ரத்தோர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிதீத் தொமர் சதமடித்து அசத்தினார். பின் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 106 ரன்கள் எடுத்திருந்த அபிஜீத் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய குனால் சிங் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அஜய் சிங் 8, அங்கித் சௌத்ரி 4, அரஃபத் கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் ராஜஸ்தான் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹரியானா அணி தரப்பில் சுமித் குமார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஹரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.