BAN vs IND, 1st Test: லிட்டன் தாஸின் சைகைக்கு பதிலடி கொடுத்த சிராஜ், விராட் கோலி!

Updated: Thu, Dec 15 2022 21:08 IST
Image Source: Google

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. இதில், புஜாரா (90), ரிஷப் பண்ட் (46), ஷ்ரேயாஸ் ஐயர் (86), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) மற்றும் குல்தீப் யாதவ் (40) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹோஷைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாகிர் ஹாசன் 20 ரன்களிலும், யாஷிர் அலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்களைத் தொடர்ந்து வந்த லிட்டன் தாஸ் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்தார். போட்டியின் 13 ஆவது ஓவரை வீசிய சிராஜின் முதல் பந்தில் லிட்டன் தாஸை பார்த்து சிராஜ் ஏதோ பேச, அதற்கு லிட்டஸ் தாஸோ கேக்கல், சத்தமா என்று கேட்டு சிராஜை நோக்கி வந்துள்ளார். அப்போது நடுவர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் அதே ஓவரின் 2 ஆவது பந்தில் லிட்டன் தாஸ் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதை வைத்து லிட்டன் தாஸை கிண்டல் செய்யும் வகையில் அவர் எப்படி செய்தாரோ அதே போன்று செய்து காட்டி அவரை வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதே அணி 44 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை