ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த ஓருநாள், டி20 மற்றும் டெஸ்ட் வீரர் விருதுதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்வாகியுள்ளார்.
கடந்த ஆண்டு, மொத்தம் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 6 சதம், 8 அரைசதங்கள் உள்பட 1,377 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். மேலும் அவரது சராசரியானது 72.47 ஆகவும், அவரது ஸ்டிரைக் ரேட் 99.13 ஆகவும் உள்ளது. இதையடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட் கோலிக்கு ’2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிசியின் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளார் கோலி.
இந்நிலையில் இந்த விருதினை பெற்றதன் மூலம் விராட் கோலி சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி விராட் கோலி பெறும் 10ஆவது ஐசிசி தனிநபர் விருது இதுவாகும். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஐசிசி தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். உலகில் வேறெந்த வீரரும் 4 ஐசிசி விருதுகளுக்கு மேல் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.