ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைக் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 243 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 சதம், 52 அரைசதங்களுடன் 7579 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே அணிக்காக விளையாடிய வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி இன்று பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சதம் என 316 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பதுடன், ஆரஞ்சு தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.