ரவி சாஸ்திரிக்கு பிரியாவிடை அளித்த விராட் கோலி!

Updated: Wed, Nov 10 2021 17:12 IST
Virat Kohli Expresses His Gratitude Towards Team India Support Staff For Their Contribution
Image Source: Google

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததன் விளைவாகவும், சாஸ்திரி பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவும், 2019ஆம் ஆண்டுக்கு பிறகும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இருவரும் இணைந்து 4 ஆண்டுகள் பரஸ்பர புரிதலுடன் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறப்பான பங்களிப்பை செய்தனர். ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் (2018-2019) டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததுடன், 2020-2021ஆம் ஆண்டில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது.

சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை வென்றது. இந்த 2 முக்கியமான நாக் அவுட் போட்டிகளிலுமே இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றுத்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி உலக கோப்பை எதையும் வெல்லவில்லை என்றாலும், ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடி உலகம் முழுதும் சென்று வெற்றிகளை குவித்தது. 

ரவி சாஸ்திரி 4 ஆண்டுகாலம் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக வரும் 17ஆம் தேதி தொடங்கும் தொடரிலிருந்து 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரை ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்காக கோலி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read: T20 World Cup 2021

அப்பதிவில், ரவி சாஸ்திரி மற்றும் ஃபீல்டிங் கோச் ஸ்ரீதர் ஆகிய இருவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “நீங்கள் (சாஸ்திரி) கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. ஒரு அணியாக உங்களுடனான எங்களது பயணம் மிகச்சிறந்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. உங்கள் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும். வாழ்வில் உங்களது அடுத்தகட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கோலி பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை