SA vs IND: கோலி குறித்து முக்கிய அறிப்பை வெளியிட்ட பிசிசிஐ!

Updated: Tue, Dec 14 2021 22:03 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதலும், ஒருநாள் தொடர் ஜனவரி 19 முதலும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. 

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு அடுத்து விளையாடவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

கோலியின் மகள் வாமிகா, கடந்த வருடம் ஜனவரி 11 அன்று பிறந்தார். தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட், ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

கோலி விலகல் தொடர்பான தகவல் வெளியான பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவேண்டுமா, இந்திய அணி மீது அவருக்கு அக்கறை இல்லையா என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

இதையடுத்து, கோலி விலகல் தொடர்பாக பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக ஒருநாள் தொடரிலிருந்து விலகப் போவதாக விராட் கோலியிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் எழவில்லை. இதற்குப் பிறகு அவர் முடிவெடுத்தாலோ, காயம் காரணமாக விலகினாலோ அது வேறு விஷயம் என்று கோலி விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை