என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் - விராட் கோலி!

Updated: Fri, Mar 24 2023 11:56 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் சற்று மோசமான ஃபார்மில் இருந்து வந்த விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த பிறகு, தொடர்ந்து இரண்டரை வருடங்கள் எந்த சதமும் அடிக்காமல் கடும் விமர்சனங்கள் மற்றும் கேளிக்கைகளை சந்தித்து வந்தார். மன இறுக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒருமாத காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட விராட் கோலி, சிறப்பான மனநிலையுடன் ஆசியகோப்பை தொடருக்கு திரும்பினார். 

அதில் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு அதிகபட்ச ஸ்கோரை அடித்தது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து, முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். சுமார் 1000 நாட்களாக சதமடிக்காமல் இருந்த இடைவெளியை காலி செய்தார். பின்னர் ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிரான சதம், இலங்கை அணிக்கு எதிரான சதம் என வரிசையாக அடிக்க தொடங்கினார். தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்ததுடன் 186 ரன்கள் வரை எடுத்துச் சென்று இரட்டை சதம் வாய்ப்பை சற்று நழுவவிட்டார்.

இப்படி, சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்த பார்மில் இருந்து வரும் விராட் கோலி, இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் அடிப்பார் என்று பலரும் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இத்தனை வருடங்களாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாத அவப்பெயருடன் இருக்கிறது. அதனை பூர்த்தி செய்வதற்கும் முனைப்பு காட்டி வருகின்றார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.

தனது சமீபத்திய ஃபார்ம் மற்றும் ஐபிஎல் குறித்து பேசிய விராட் கோலி, “நன்றாக விளையாடி வருகிறேன் என நினைக்கிறேன். ஆனால் இன்னும் என்னுடைய பெஸ்ட் ஆட்டம் வெளிப்படவில்லை என்றும் தோன்றுகிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று உறுதியாக நம்புகிறேன். அதேநேரம் நான் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளிப்படுத்தினால், அது அணிக்கு பெரிதளவில் உதவும் என்றும் நினைக்கிறேன். நிச்சயம் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முயற்சிப்பேன்.

15 வருடங்களாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், ஆர்சிபி அணியினர் ஒவ்வொருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பலனாகவே எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த வருடம் அணி வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் புரிதல் இன்னும் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. அதுவும் இன்னும் நன்றாக முனைப்புடனும், ஈடுப்பாட்டுடனும் செயல்படுவதற்கு உதவும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை