ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் ஆர்பிசியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
13000 டி20 ரன்கள்
அதன்படி இத்தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 114 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 13ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் செய்யும் பட்சத்தில் உலகளவில் 13ஆயிரம் டி20 ரன்களை அடித்த முதல் இந்தியர் மற்றும் ஐந்தாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். விராட் கோலி இதுவரை 399 டி-20 போட்டிகளில் விளையாடி 382 இன்னிங்ஸில் 41.43 சராசரியில் 12,886 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில், அலெக்ஸ் ஹேல்ஸ், கீரன் பொல்லார்ட், சோயப் மாலிக் ஆகியோர் மட்டுமே இந்த வடிவத்தில் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
400 டி-20 போட்டிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி தனது 400ஆவது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் 400 டி20 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை அவர் பெறவுள்ளார். முன்னதாக இந்திய அணியின் ரோஹித் சர்மா 448 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 412 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் விராட் கோலி 8 சதங்கள், 44 அரைசதங்கள் என 8004 ரன்களைக் குவித்து, அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி