ஐபிஎல் தொடரில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!

Updated: Fri, May 02 2025 22:18 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18அவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

அதன்படி இந்தப் போட்டியில் விராட் கோலி மேற்கொண்டு 53 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் தனது 8500 ரன்களை நிறைவு செய்வார். இதனை அவர் செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 8500 ரன்களை பூர்த்தி செய்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் படைக்கவுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 262 போட்டிகளில் 254 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 8447 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, இப்போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில், எம் சின்னசாமி  கிரிக்கெட் மைதானத்தில் தனது 150 டி20 சிக்ஸர்களை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இதுவரை அவர் 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 63.29 என்ற சராசரியில் 443 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஆறு அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Royal Challengers Bengaluru XI: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), குர்னால் பாண்டியா, டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

Also Read: LIVE Cricket Score

Chennai Super Kings XI: ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, மத்திஷா பத்திரனா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை