இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ஒற்றை வார்த்தை ட்வீட்!

Updated: Sat, Jul 16 2022 21:33 IST
Image Source: Twitter

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சதம் அடித்திருந்தார். அதன் பின் அவரால் சதமடிக்க முடியவே இல்லை. சதம் அடிப்பது என்பது விராட் கோலிக்கு கடந்த 2 ஆண்டுகளாக எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இங்கிலாந்து தொடரில் கோலியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மாற்றியமைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே  11 மற்றும் 20 ரன்களை மட்டுமே அவர் குவித்தார். 

அதன் பின் விளையாடிய 2 டி20 போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 25 பந்துகளை சந்தித்த விராட் கோலி 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் விராட் கோலிக்கு முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. இருப்பினும், அவரால் நீண்ட நேரத்திற்கு நிலைத்து நின்று ஆட முடியவில்லை. அதனால், அவரது பேட்டிங் மீதான விமர்சனங்கள் மீண்டும் எழுந்தன. மேலும், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில்,இன்று (ஜூலை 16) விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் இரண்டு சிறகுகள் உள்ளன. அந்த சிறகுகள் உள்ள படத்தில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அந்த வரிகள்  “ நான் விழுந்துவிட்டால் என்ன ஆகும்” “அப்படியா, மை டார்லிங் உன்னால் பறக்க முடிந்தால்” என உள்ளது. 

விராட் கோலி இந்த புகைப்படத்தை பதிவிட்டு பெர்ஸ்பெக்டிவ் எனத் தலைப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

விராட் கோலியின் இந்தப் பதிவினை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ரீட்விட் செய்துள்ளார். அதில், “நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள். கிரிக்கெட்டில் நீங்கள் செய்துள்ள சாதனைகள் பலரால் கனவில் மட்டுமே காண இயலும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை