ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!

Updated: Tue, Aug 29 2023 22:25 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்திய அணி தற்போது நாளை தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இதுகுறித்து பேசிய விராட் கோலி, “ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவரின் விளையாட்டுத் திறமையை சோதிக்கும் தொடராக ஒருநாள் கிரிக்கெட் தொடர் அமையும். ஒருநாள் தொடரில் ஒருவரின் முழு விளையாட்டுத் திறமையையும் சோதிக்க முடியும். உங்களது திறன், பொறுமை, சூழ்நிலைக்கேற்ப விளையாடுவது போன்றவற்றை பரிசோதிக்க ஒருநாள் போட்டிகள் உதவும். அதனால், ஒருநாள் போட்டி ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன். 

ஒருநாள் போட்டிகள் எப்போதும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக் கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஏனென்றால், ஒருநாள் போட்டிகளில் நான் சவாலான சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதை விரும்புகிறேன். நான் எப்போதும் அதனை செயல்படுத்த முயற்சிக்கிறேன். இந்த மாதிரியான சவால்கள் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக அமைகின்றன. அதனால், நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அதிகம் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை