அதிக ஃபிட்னஸுடன் இருந்த ஒரே வீரர் இவர் தான் - பிசிசிஐ!

Updated: Sun, Oct 16 2022 12:17 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கடந்த 2021 முதல் 2022 சீசனுக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் காயம் அடைந்த வீரர்கள் குறித்தும் அதில் காயமடையாமல் இருந்த ஒரு வீரர் குறித்த சுவாரசிய தகவலையும் தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாகவே பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய அணியின் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வீரர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும்.

இப்படி பிசிசிஐ ஒப்பந்தத்துடன் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் எந்த தொடரிலாவது காயம் அடைந்தால் உடனடியாக அணியிலிருந்து வெளியேறி பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமி-யில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காயமடைந்த வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி சான்று இருந்தால் மட்டுமே மீண்டும் அணியில் இணைய முடியும்.

அந்த வகையில் கடந்த சீசனில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் கேஎல் ராகுல், ரஹானே, பும்ரா, ரிஷப் பந்த், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சூர்யா குமார் யாதவ், ஹர்ஷல் படேல் என பல நட்சத்திர வீரர்களோடு சேர்த்து மொத்தம் 23 பேர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர்த்து இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடும் வீரர்கள், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் என தேசிய கிரிக்கெட் அகாடமியில் பலர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவலில் கடந்த 2021-22 சீசனில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெறாத ஒரே வீரர் விராட் கோலி தான் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு முழுவதுமே ஒருமுறை கூட விராட் கோலி காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவில்லை. பிட்னஸிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விராட் கோலி காயமே இன்றி அற்புதமாக விளையாடி உள்ளார்.

இடையில் ஒரு சில தொடர்களில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டாலும் எந்த ஒரு வகையிலும் அவர் காயத்தால் பாதிக்கப்படவில்லை என்ற சுவாரசிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பிட்னசுக்கு அதிகளவு முக்கியத்துவம் முதல் வீரராக இருக்கும் விராட் கோலி களத்திலும் அதிவேகமாக செயல்படக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை