ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. ஐபிஎல் 14 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை, சிஎஸ்கே 4 முறை என கோப்பைகளை வாரிக்குவித்துள்ள நிலையில், விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் என மிகப்பெரும் ஜாம்பவான்களை பெற்றிருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பரிதாபத்திற்குரிய அணி ஆர்சிபி.
2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, 9 சீசன்கள் அந்த அணியை வழிநடத்தினார். ஆனால் இந்த 9 சீசன்களில் ஒருமுறை கூட அவரால் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
2016ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும் ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது. அந்த ஒரு சீசனில் ஆடிய அளவிற்கு அந்த அணி வேறு எந்த சீசனிலும் ஆடியதில்லை.
விராட் கோலி ஆர்சிபி அணிக்கு ஒரு ஐபிஎல் கோப்பையைக்கூட வென்று கொடுத்ததில்லை என்பது அவர் மீதான கடும் விமர்சனமாக இருந்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங் ஃபார்மும் சரியாக இல்லாததையடுத்து, இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து ஆர்சிபி அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிவில்லியர்ஸும் ஓய்வு அறிவித்துவிட்டார். இப்போதைக்கு ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் மட்டும் தான், பழைய வீரர்களில் கேப்டன்சிக்கான ஆப்சனாக இருக்கிறார். ஆனால் அவரை ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்க வாய்ப்பில்லை.
ஷ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் பங்குபெறுவதால், அவர்களில் ஒருவரை எடுத்து கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, அந்த அணியின் சூழலுக்கு முற்றிலும் புதிதான ஒரு கேப்டன்சியில் சோபிப்பது சற்று கடினம் தான்.
எனவே தான் அஜித் அகார்கர், கோலியையே ஆர்சிபி அணி மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், “விராட் கோலி மீண்டும் கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் ஏற்று, முழு எனர்ஜியுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவார் என்றால், அதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கு எளிதான தீர்வு. ஆர்சிபி அணி கடந்த சில ஆண்டுகளில் அணியின் டெப்த்தை அதிகப்படுத்துவதற்கேற்ற வகையில் வீரர்களை ஏலத்தில் வாங்கவில்லை.
அந்த அணி டாப் 3 வீரர்களையே அதிகமாக சார்ந்து இருந்திருக்கிறது. மிடில் ஆர்டர் எப்போதுமே பலவீனமாகத்தான் இருந்திருக்கிறது. எனவே மிடில் ஆர்டரை வலுப்படுத்துவதில் பணத்தை செலவு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வீரரை அதிக தொகை கொடுத்து வாங்கினால், அவர் ஒருசில போட்டிகளை ஜெயித்து கொடுப்பாரே தவிர, ஒரு வீரரை ஒரு தொடரை ஜெயித்து கொடுக்க முடியாது” என்று கருத்து கூறியுள்ளார்.