18ஆம் நம்பர் எனக்கு பிடித்த நம்பரும் அல்ல, நான் கேட்டு வாங்கிய நம்பரும் அல்ல - விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சமகாலத்தில் தலைசிறந்த வீரர்கள் ஒருவராக போற்றப்பட்டு வருகிறார். தனது பேட்டிங் மூலம் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். அதில் சில முறியடிக்க முடியாத அளவிற்கும் இருக்கிறது.விராட் கோலியின் அபார திறமைக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இவரை பின்தொடர்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.
விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவரது ஜெர்சி நம்பர் 18 மிகவும் பிரபலமாக இருக்கிறது. தனது அண்டர் 19 காலகட்டத்தில் துவங்கி, சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்திலும் ஒரு 18ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
இந்த 18ஆம் நம்பர் விராட் கோலிக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்று பலரும் அறிவோம். ஆனால் இது தனக்கு பிடிக்காத நம்பர் என்றும், நான் ஒன்றும் கேட்டு வாங்கவில்லை அது தானாக அமைந்தது; பின்னர் நெருக்கமாகிவிட்டது என்றும் தனது சமீபத்திய பேட்டியில் விராட் கோலி குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இ்துகுறித்து பேசிய அவர், “எனக்கு நம்பர் 18 தான் வேண்டும் என்று நான் எப்போதும் கேட்டது இல்லை. எனது அண்டர் 19 காலத்தில் அதுவே அமைந்துவிட்டது. பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் நான் அறிமுகமான தேதி ஆகஸ்ட் 18. மேலும் துரதிஷ்டவசமாக எனது தந்தை இறந்த தேதி 18. ஆகையால் ஆரம்பத்தில் நம்பர் 18 எனக்கு எந்த வகையிலும் நெருக்கமாக இல்லை என்றாலும், இனி ஒருபோதும் அப்படி இருக்காது. மனதிற்கு மிகவும் நெருக்கமான நம்பராக காலப்போக்கில் அது மாறிவிட்டது. உணர்வுபூர்வமான ஒன்றாகவும் இப்போது இருக்கிறது” என்று குறிப்பிட்டார்