ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

Updated: Mon, May 27 2024 16:08 IST
Image Source: Google

 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடராக இருந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில் பல்வேறு சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாதனை படைத்து அசத்தியது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக கோப்பையை வென்ற மூன்றாவது அணி எனும் பெருமையையும் தக்கவைத்துள்ளது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனித்துவ சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உள்பட 741 ரன்களை குவித்து, நடப்பு சீசனில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் ஆரஞ்சு தொப்பியையும் வென்று அசத்தியுள்ளார். 

இது அவரது இரண்டாவது ஆரஞ்சு தொப்பி விருதாகும். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இரண்டு முறை ஒரு சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி 973 ரன்களை குவித்ததுடன் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை