சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!

Updated: Thu, Jan 18 2024 20:12 IST
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி! (Image Source: Google)

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிநேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கோல்டன் டக் அவுட்டானார்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரது காம்பினேஷனில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர், கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். குர்பாஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜத்ரன் 50 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தானது லெக் ஸைடு திசையில் வைடாக சென்ற நிலையில் அதனை பிடித்து சஞ்சு சாம்சன் ஸ்டெம்பிங் செய்தார். டிவி ரீப்ளேயில் சரியான முறையில் ஸ்டெம்பிங் செய்தது தெரியவர அவுட் என்று காட்டப்பட்டது. இது ரோகித் சர்மாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று போட்டியின் 16.3ஆவது பந்தை கரீம் ஜனத் எதிர்கொண்டார். 

அவர் டீப் மிட் விக்கெட் திசையில் பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். டீம் மிட் விக்கெட் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலி டைவ் அடித்து ஒரு கையால் பந்தை பிடித்த நிலையில் மைதானத்திற்குள் தூக்கி எறிந்து கீழே விழுந்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. 

இதில், முதல் பந்திலேயே குல்பதீன் நைப்பை ரன் அவுட் முறையில் கோலி மற்றும் சாம்சன் இருவரும் இணைந்து ஆட்டமிழக்கச் செய்தனர். முதல் சூப்பர் ஓவர் டிரா ஆன நிலையில், 2ஆவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், ஒவ்வொரு தொடருக்கு பின்னரும் சிறந்த ஃபீல்டருக்கு பதக்கம் அளித்து வருகிறார். 

அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை விராட் கோலி தட்டி சென்றுள்ளார். அதற்கு முன் விராட் கோலி குறித்து பேசிய பயிற்சியாளர் திலீப், “இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் பார்த்தோமென்றால் 2 பேர் தொடர்ந்து சீரான ஃபீல்டிங்கை செய்து வந்துள்ளனர்.

அதில் ஒருவர் ரிங்கு சிங், மற்றொரு வீரர் விராட் கோலி. உலகக்கோப்பை தொடரின் 2 முறை சிறந்த ஃபீல்டருக்கான விருதை விராட் கோலி வென்றார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்ய வேண்டாம் என்று ஷார்ட் லெக் மற்றும் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தார். உலகக்கோப்பையில் சிறந்த ஃபீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார்.

 

ஃபீல்டிங்கின் போது அவரின் வேலையையும் மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். விராட் கோலி செய்யும் ஃபீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை