ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்கும் சேவாக்!
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இதுவரை 275 பேர் பலியாகியாகி உள்ளதாகவும், 88 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 187 உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. உடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. 1,175 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், "ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், இந்த கோர ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்த கல்வி அறிவை கொடுப்பது தான்.
சேவாக் இன்டர்நேஷனல் உறைவிட பள்ளியில் இந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும், மருத்துவக் குழுவினருக்கும் மற்றும் ரத்த தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளாா்.