அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Nov 29 2023 09:53 IST
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கௌகாத்தியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்து இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

மேலும் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக மெக்ஸ்வல் 104 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 35 ரன்களையும், மேத்யூ வேட் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த தோல்வி அனைவரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் போட்டி முடிந்து இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம்.

அதேபோன்று இந்த 220 ரன்களை வைத்து டியூ அதிகமாக இருக்கும் இந்த மைதானத்தில் எதிரணியை தடுத்து நிறுத்துவது சற்று கடினம் தான் இருந்தாலும் பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அளவு ரன்கள் ஸ்கோர் போர்டில் இருந்ததாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி இந்த போட்டி முழுவதுமே ஆட்டத்திற்குள் இருந்தனர். நான் எங்களது வீரர்களிடம் மேக்ஸ்வெல்லை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவரை எங்களால் கடைசி வரை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. அதேபோன்று 19-வது ஓவரை அக்சர் பட்டேலுக்கு கொடுக்க காரணம் அவரது அனுபவம் தான். டியூ இருந்தாலும் அவரது அனுபவம் கை கொடுக்கும் என்று நினைத்தே அவரிடம் பந்தை கொடுத்தேன். இந்த போட்டியில் தோற்று இருந்தாலும் எங்கள் அணியின் வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை