பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!

Updated: Tue, May 28 2024 12:08 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் கனாடா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நாடத்தின.

கனடா vs நேபாள்

இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய கனடா அணியானது நிக்கோலஸ் கிர்டன், ரவீந்தர்பால் சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் கிர்டன் 52 ரன்களையும், ரவீந்தர்பால் சிங் 41 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியானது சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் குசால் மல்லா 37 ரன்களையும், அனில் ஷா 24 ரன்களையும், ஆசிஃப் ஷேக் 22 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நேபாள் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கனடா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

பப்புவா நியூ கினி vs ஓமன்

நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஓமன் மற்றும் பப்புவா நினி கினி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லெகா சிகா 28 ரன்களைச் சேர்த்தார். ஓமன் அணி தரப்பில் கேப்டன் ஆகிப் சுலேஹரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணிக்கு காலித் கைல் 27 ரன்களையும், மற்றும் ஸீஷான் மக்சூத் 45 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஓமன் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

நமீபியா vs உகாண்டா

நேற்று நடைபெற்ற மூன்றாவது பயிற்சி போட்டியில் நமீபியா மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த உகாண்டா அணியானது முகாசாவின் அரைசதத்தின் மூலமாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகாசா 51 ரன்களையும், ராபின்சன் ஓபுயா 38 ரன்களையும் சேர்த்தனர். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு நிக்கோலஸ் டவின் ஜேபி கோட்ஸி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்மூலம் நமீபியா அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் டவின் 54 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை