ஷுப்மன் கில்லை இழந்தது வருத்தமளிக்கிறது - பிரண்டன் மெக்கல்லம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல் ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.
கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில்லை அந்த அணி தக்கவைக்கவில்லை.
இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், “நீங்கள் நிறைய வீரர்களை இழக்கப் போகிறீர்கள் என்பதால் நீங்கள் திட்டமிட வேண்டும். சுப்மான் கில்லை இழந்தது ஏமாற்றம் அளித்தது. ஆனால் சில சமயங்களில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும், வரவிருக்கும் ஏலத்திற்கு நாங்கள் நன்கு தயாராக இருப்போம்.
சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் ஒரு தசாப்த காலமாக அணியின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். கடந்த இரண்டு சீசன்களில் வருண் சக்ரவர்த்தியின் திறமை என்ன என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் 2021 இன் இரண்டாம் பாதியில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதையும் நான் அறிவோம்” என்று தெரிவித்தார்.
ஐபிஎல் 15ஆவது சீசனுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன்( 6 கோடி), ஆண்ட்ரே ரஸ்ஸல் (12 கோடி), வருண் சக்கரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி) ஆகியோரைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.