இவரால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வாங்கித்தர முடியும் - வாசிம் அக்ரம்!

Updated: Mon, May 01 2023 19:51 IST
Image Source: Google

இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை லண்டன் நகரில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.

கடந்த, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. தற்போது நடைபெற இருக்கும் தொடரை வெல்வதற்கு வலுவான இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முகமது ஷிமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஆல்ரவுண்டர் சர்துல் தாகூர் இடம் பெற்றிருக்கிறார்.

தனது முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றார் உனத்கட். அந்தப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட் களையும் வீழ்த்தினார். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெய்தேவ் உனத்கட் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் உலகத்தரம் வாய்ந்த வேக பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம் “முதல் தர ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இருக்கும் ஜெய்தேவ் உனத்கட் தொடர்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏனென்றால் அவர் தொடர்ச்சியாக முதல் தரப் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது அணி ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. நான் அவரை முதலில் சந்திக்கும் போது 18 வயது பையனாக இருந்தார். அவரது கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அடக்கமும் இன்று வரை அப்படியே இருக்கிறது.

கொல்கத்தா அணியில் நான் பணியாற்றிய காலங்களில் முகம்மது ஷமி என்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வார். ஷமி மற்றும் உனத்கட் மாலையில் என்னுடன் அமர்ந்து தேநீர் அருந்துவார்கள். என்னுடன் பணியாற்றிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது. மேலும் அவர்கள் தங்களது நாட்டிற்காகவும் விளையாடுகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

உனத்கட் இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஓவல் மைதானத்தில் பந்து வீசும் போது அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடது கை பந்துவீச்சாளர்கள் என்றுமே பேட்ஸ்மன்களுக்கு ஆபத்தானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உனத்கட் அணியில் இடம் பெற்றால் நிச்சயமாக இந்தியாவிற்கு வெற்றியை வாங்கித் தரக் கூடிய ஒரு வீரராக இருப்பார்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை