மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!

Updated: Sun, Oct 15 2023 13:25 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடரில் நேற்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 36 ரன்களுக்குள் இழந்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தினர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 8வது முறையாக தோல்வியடைந்தது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வென்றதால் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவர் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொண்டார். அஹ்மதாபாத் மைதானத்திலேயே விராட் கோலியின் 2 ஜெர்சிக்களில் பாபர் அசாம் கையெழுத்து பெற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், “விராட் கோலியிடம் இருந்து 2 ஜெர்சியை பாபர் அசாம் வாங்கும் வீடியோவை அனைவரும் பகிர்வதையும், ஒளிபரப்புவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, இப்படி வெளிப்படையாக செய்திருக்க கூடாது. திறந்தவெளி மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது என்றே சொல்லுவேன்.

அதற்கான நாள் இது இல்லை. உங்களின் மாமா மகன் அல்லது உறவுக்கார பையன் கோலியின் ஜெர்சியை கேட்டிருந்தால், ஓய்வறையில் சென்று தனியாக வாங்கி இருக்கலாம். ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன், கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பாக பார்க்கும் போது இப்படி செய்ய கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை