இங்கிலாந்து தொடரில் இந்திய அணி தொடக்க வீரர் யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடர் தொடங்க இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரியாக 2 மாதங்கள் ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக திகழ்கிறார். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக 3 வீரர்களை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தற்போது டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு இன்னும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர்.
இதில் மயங்க் அகர்வால், வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக செயல்படுவார் என்பதால் அவரை அணியில் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. ஒருவேளை அவரும் சிறப்பாக ஆடவில்லை என்றால் இங்கிலாந்து களத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த ஹனுமா விஹாரிக்கு ஓப்பனிங் களமிறங்க வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளது.
மேலும் அறிமுக வீரரான அபிம்ன்யு ஈஸ்வரனுக்கு, இங்கிலாந்து தொடரின் போது தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புகள் வழங்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஆடாத காரணத்தால் அவரை ஓப்பனராக களமிறக்க பிசிசிஐ சிந்திக்கவில்லை. எனினும் அவரை மிடில் ஆர்டரில் 4 விக்கெட்டிற்கு களமிறக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. மிடில் ஆர்டரில் சில காலம் நன்றாக விளையாடிய பின்னர் அவரை ஓப்பனிங்கிற்கு மீண்டும் கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்ப்டுகிறது.