இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுத்த வீரர்கள் பட்டியலை அறிவித்தன. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வலுக்கட்டாயமாக வாங்கியது உட்பட சில அணிகள் ட்ரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. இதை தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் 77 இடத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து 1,166 வீரர்கள் போட்டியிட உள்ளனர்.
முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை இன்று விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ரசிகர்களை கவர்வதற்காகவும் புதுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.
அந்த விதிமுறைப்படி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மற்றொரு வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி உள்ளே வரும் வீரர் மற்றவர்களைப் போலவே முழுமையாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களுக்கான பஞ்சம் நிலவுவதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்த இம்பேக்ட் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே 2024 சீசனில் இந்த விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவில், “இம்பேக்ட் வீரர் விதிமுறையை வெளியே எடுப்பது பற்றி ஐபிஎல் சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதுகிறேன். அது ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான ஊக்கத்தை கொடுக்கவில்லை. ஏற்கனவே ஆல் ரவுண்டர்களுக்கான பஞ்சமும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருக்கும் பிரச்சனையும் இந்திய கிரிக்கெட்டில் நிலவுகிறது. இது பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன” என்று கூறியுள்ளார்.
அவர் கூறுவது போல முன்பெல்லாம் 6 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்கள் 1 தரமான ஆல் ரவுண்டர் என்ற கலவையுடன் அணிகள் களமிறங்கும். ஆனால் இந்த விதிமுறையால் இப்போதெல்லாம் 6 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற கலவையுடன் அணிகள் களமிறங்குகின்றன. மேலும் 6ஆவது பவுலரை இம்பேக்ட் விதிமுறை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் என்று அணிகள் நினைப்பதால் ஆல் ரவுண்டர்கள் பந்து வீசும் வாய்ப்பு குறைவது குறிப்பிடத்தக்கது.