6,6,2,6,6 - சந்தீப் சர்மா ஓவரை பிரித்து மேய்ந்த அப்துல் சமத் - காணொளி!

Updated: Sun, Apr 20 2025 16:38 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த அப்துல் சமத், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. 

அதன்படி இப்போட்டியில் லக்னோ அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில், ராஜஸ்தான் தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட அப்துல் சமத் ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர் அடித்த நிலையில், ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் அபாரமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அசத்தினார். 

இதன்மூலம் அந்த ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மொத்தமாக 27 ரன்களைச் சேர்த்தது. அதில் அப்துல் சமத் மட்டுமே 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்திருந்தார். ஒருவேளை அந்த ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு சிக்ஸர் குறைவாக அடித்திருந்தாலும், நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் சென்றிருக்கும். இந்நிலையில் தான் அப்துல் சமத் அதிரடி விளையாடும் காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி ஆகியோரின் அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66 ரன்களையும், ஆயூஷ் பதோனி 50 ரன்களையும் சேர்க்க, அப்துல் சமத் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களையும், ரியான் பராக் 39 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை