ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன் பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் 87 ரன்களுடனும், ஷுப்மன் கில் 78 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
இதில் சதத்தை நோக்கி விளையாடி வந்த கேஎல் ராகுல் 90 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்படி இன்னிங்ஸில் 70ஆவது ஓவரை இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தை அபாரமான இன்ஸ்விங்கராக வீசினார். அதனைச் சற்று எதிர்பாராத ராகுல் அதனை தடுக்க முயற்சித்த நிலையில் முழுமையாக தவறவிட்டார். இதனால் அந்த பந்தானது அவரது பேடுகளை தாக்கியது.
இதனையடுத்து இங்கிலாந்து வீரர்கள் எல்பிடபிள்யூக்கு முறையிட்ட நிலையில், கேஎல் ராகுலும் பெவிலியனை நோக்கி நடக்கத்தொடங்கினார். அதன்பின் களநடுவரும் அதனை அவுட் என்று அறிவித்தார். இதன் காரணமாக இந்த இன்னிங்ஸில் 230 பந்துகளை எதிர்கொண்டு 90 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுல் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Also Read: LIVE Cricket Score
இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.