காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரது அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
அதிலும், கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை களமிறங்கியது.
முதல் ஓவரை முகமது ஷமி வீச, அந்த ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். பின்னர் இரண்டாவது ஓவரை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா வீசிய அதிவேக பந்தை கணிக்காமல் ரோஹித் சர்மா லெக் சைடில் அடிக்க பேட்டை திருப்பினார். ஆனால் பந்து வேகமாக வந்ததால், பேட்டில் எட்ஜ் ஆகியது. இதனால் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து, அவரிடமே கேட்சானது.
இதனால் 8 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில், ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் காணொளி இணையத்தில் வைராலி வருகிறது.