அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டிய சஜனா; வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலிஸ் கேப்ஸி 75 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி வீராங்கனைகள் ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் அதன்பின் ஜோடி சேர்ந்த யஷ்திகா பாட்டியா, கேப்டன் ஹர்மன்ப்ரீது கவுர் இணை அதிரடியாக விளையாடிய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 57 ரன்களில் யஷ்திகா பாட்டியா விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மும்பை அணி கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது மும்பை அணி தரப்பில் அறிமுக வீராங்கனையான சஜீவன் சஜனா களமிறங்கினார். அறிமுக வீராங்கனையான இவர் கடைசி பந்தில் எனன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், அலிஸ் கேப்ஸி வீசிய பந்தை இறங்கி வந்து சிக்சர் விளாசியதுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
மேலும் தனது அறிமுக ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு விளாசிய சஜீவன் சஜனா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் சஜீவன் சஜனா சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.