டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் மே 29ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற்து. இதில் நேற்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹாம்ப்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களையும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 13 பவுண்டரிகளுடன் 62 ரன்களையும், டாபி அல்பெர்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களையும் சேர்த்தனர்.
இதைனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய எசெக்ஸ் அணியில் மைக்கேல் பெப்பர் 51 ரன்களையும், பால் வால்டர் 23 ரன்களையும், ஆடம் ரோஸிங்டன் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஹாம்ப்ஷையர் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் எசெக்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இத்தொடரில் தனது வருகையையும் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். முன்னதாக இவர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
முன்னதாக ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றிருந்த டெவால்ட் பிரீவிஸை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. பின்னர் எஸ்ஏ20 லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து டெவால்ட் பிரீவிஸை சிஎஸ்கே அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. அதன்பின் நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 180 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 225 ரன்களைக் குவித்து அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து அவர் இதுவரை 88 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் மற்றும் 10 அரைசதங்கள் என 2080 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 140 பவுண்டரிகளும், 146 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எசெக்ஸ் அணிக்கு எதிராக டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது.