மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திக்வேஷ் ரதி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் ஐடன் மாக்ரம் 47 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களைக் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே 61 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 45 ரன்களையும், இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய திக்வேஷ் ரதி ஒவ்வொரு முறையும் விக்கெட்டை வீழ்த்திய கையோடு அதனை கொண்டாடும் வகையில் கையில் கையேழுத்திட்டு பேட்டர்களை வழியனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் இது முதல் போட்டியிலேயே நடத்தை விதியை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனையடுத்து அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் தனது இந்த கொண்டாட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செய்ததன் காரணமாக இரண்டாவது முறையும் அபாரதம் விதிக்கப்பட்டதுடன், லக்னோ அணிக்கான ஃபேர்பிளே புள்ளிகளும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் திக்வேஷ் ரதி விக்கெட்டை வீழ்த்திய கையோடு மீண்டும் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் இம்முறை அவர் தனது கைகளில் கையொப்பம் இடுவதற்கு பதிலாக, தரையில் தனது கையொப்பத்தத்தை இட்டு பேட்டரை வழியனுப்பினார். அதன்படி இப்போட்டியில் சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றியதும் திக்வேஷ் ரதி தனது இந்த வழக்கமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவருக்கு இப்போட்டியிலும் அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திக்வேஷ் ரதியின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.