அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும், மார்கோ ஜான்சன் 23 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் இம்ரான் தாஹீர் மற்றும் ஹர்டுஸ் வில்ஜோன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் அர்டர் வீரர்கள் டெவான் கான்வே 30, ஃபாஃப் டூ பிளெசிஸ் 19, ஜேபி கிங் 9, விஹான் லூப் 13, மொயீன் அலி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடிய நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கிரெய்க் ஓவர்டன், லியாம் டௌசன், ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூபிளெசிஸ் பேட்டிங்கில் சோபிக்க தவறினாலும், ஃபில்டிங்கில் அவர் பிடித்த ஒரு கேட்ச்சானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை இம்ரான் தாஹிர் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் அணி வீரர் பெடிங்ஹாம் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க எண்ணி தூக்கி அடித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அந்த ஷாட்டை அவர் முழுமையாக அடிக்காத நிலையில், பந்தானது 30யார்ட் வளையத்திற்கு வெளியே செல்வது போல் இருந்தது. இதனை சரியாக கணித்த டூ ஃபிளெசிஸ் டைவ் அடித்ததுடன் அசத்தலான கேட்சை பிடித்தும் அசத்தினார். இதனால் 27 ரன்களை எடுத்திருந்த கையோடு பெடிங்ஹாம் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.