ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!

Updated: Fri, Feb 21 2025 10:39 IST
ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அவருக்கு மாற்றாக மற்றொரு இடது கை தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஃபகர் ஸமான் தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காயத்துடன் பேட்டிங் செய்த ஃபகர் ஸமான் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு சென்ற நிலையில், வீரர்கள் ஓய்வரையில் அவர் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு அழுவதை காண முடிந்தது.

மேற்கொண்டு ஃபகர் ஸமானுக்கு சக வீரர்கள் வந்து தங்கள் ஆறுதலை கூறுவது அக்காணொளியில் இடம்பிடித்திருந்தது. இந்த காணொளியானது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணியில் இருந்து தொடர்ந்து விலக்கி வைக்க பட்டிருந்த ஃபகர் ஸமான், அதன்பின் சைம் அயூப்பின் காயம் காரணமாக அவருக்கு பதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். 

அதன்பின் நியூசிலாந்து, தென் ஆப்ப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டிருந்த அவர், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் தொடரின் முதல் போட்டியிலேயே காயத்தை எதிர்கொண்டதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை