உடை மாற்றும் அறையில் புகைப்பிடித்த இமாத் வசிம்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Mar 19 2024 13:06 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, ஷதாக் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி இமாத் வசிம் மற்று ஷதாப் கான் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 57 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் இமாத் வசிம் 5 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் மார்ட்டின் கப்தில் 50 ரன்களையும், அசாம் கான் 30 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பிஎஸ்எல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

 

மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாத் வசிம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியின் போது வீரர்கள் உடைமாற்றும் அரையில் இஸ்லாமாபாத் அணியின் நட்சத்திர வீரர் இமாத் வசிம் புகைப்பிடிப்பது போன்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் இப்படி புகைப்பிடிப்பது அவரை பின் தொடரும் ரசிகர்களையும் புகைப்பிடிக்க ஊக்குவிக்கும் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை