ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சான்ட்னர்; 'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' - வைரல் காணொளி!

Updated: Wed, Aug 14 2024 12:39 IST
Image Source: Google

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணியில் மைக்கேல் பெப்பர் 3 ரன்களிலும், கேப்டன் டேனியல் லாரன்ஸ் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஜென்னிங்ஸும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் 3 ரன்களுக்கு என விக்கெட்டை இழக்க, ரவி போபாரா 31 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் டௌசன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஸ்கோரை சேர்த்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் லண்டன் ஸ்பிரிட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்தது. சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - கிரஹாம் கிளார்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கிரஹாம் கிளார்க் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஓலிவர் ராபின்சன்னும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. 

பின் 44 பந்துகளில் நார்த்தன் சூப்பர்சார்சர்ஸ் அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால், டக்வொர்த் லூயிஸ் முறையில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆதில் ரஷித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

 

இந்நிலையில் இப்போட்டியின் போது மிட்செல் சாண்ட்னர் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 11ஆவது பந்தில் மைக்கேல் பெப்பர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். ஆனால் பந்து அவர் நினைத்ததை போல் பேட்டில் படததால், அது பவுண்டரி எல்லைக்கு செல்லவில்லை. அப்போது 30 யார்ட் வட்டத்திற்கு ஃபில்டிங் செய்துகொண்டிருந்த மிட்செல் சாண்ட்னர் பின்னோக்கி ஒடியதுடன், அபாரமாக தாவி கேட்ச் பிடித்து அசத்தினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதனைக்கண்ட ரசிகர்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மிட்செல் சாண்ட்னர் பின்னோக்கி சென்றவாரே டைவ் அடித்து கேட்ச்சை பிடித்திருந்தார். இதனால் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மைக்கேல் பெப்பர் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் மிட்செல் சண்ட்னர் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை