சாம்பியன்ஸ் கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் முகமது ஷமி இந்திய அணிக்காக எப்போது மீண்டும் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக முகமது ஷமி தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி ஷமி தனது எக்ஸ் பக்கத்தில் வலைகளில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வழக்கமான பந்துவீச்சு வேகத்தை விட கூடுதல் வேகத்தில் பந்துவீசுவது போன்ற காட்சிகளும் இடம்பிடித்திருந்தன.
இதன் மூலம் அவர் பிசிசிஐ தேர்வாளர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தான் இப்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மீண்டும் களத்திற்கு வந்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார். ஷமியின் இக்காணொளியை கண்ட ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கொண்டு ஷமி பந்துவீசி பயிற்சி பேறும் காணொளி இணையாத்தில் வைரலாகியும் வருகிறது.
முன்னதாக கடந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்காக முகமது ஷமி விளையாடினார். மேலும் அத்தொடர் முழுவதும் அபாயகரமான முறையில் பந்துவீசிய ஷமி இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஆனால் இதற்கிடையில் அவர் முழங்கால் காயத்தால் தொடர்ந்து போராடி வந்தார். அதன்பின் அவரது காயம் மிகவும் கடுமையானதாக மாறியது.
இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிரிக்கெட்டில் இருந்து சிறிதுகாலம் விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தான் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷமி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பெங்கால் அணிகாக விளையாடி வருவதுடன், தனது உடற்தகுதியையும் நிரூபித்துள்ளாஅர். அதில் அவர் தனது பந்துவீச்சுடன் மட்டுமல்லாமல் தனது பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
குறிப்பாக நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் அவ்ரது பேட்டிங் திறனை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்திய அணிக்காக கடந்த 2013ஆம் அண்டு அறிமுகமான முகமது ஷமி இதுவரை 64 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி அதிகரித்து வருகிறது.