வாஷிங்டன் சுந்தரை ஸ்தம்பிக்க வைத்த பாட் கம்மின்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்ததுடன் 56 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடிய 29 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 156 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 39ஆவது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசிய நிலையில் அந்த ஓவரை வாஷிங்டன் சுந்தர் எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளை அவுட் ஸ்விங் பந்துகளாக பாட் கம்மின்ஸ் வீசிய நிலையில், 4அவது பந்தை இன்ஸ்விங்காக வீசினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அதனை சரியாக கணிக்க தவறிய வாஷிங்டன் சுந்தர் பந்தை தடுப்பதா அல்லது விடுவதா என்று தெரியாமல் வெறுமென பேட்டை மட்டுமே நீட்ட, அந்த பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் ஒருகணம் என்ன நடந்தது என்று புரிமால் பார்த்த வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.