பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த் - காணொளி!
தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் ஒருமுறை பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதிலும் குறிப்பாக அவர் விக்கெட்டை இழந்த நிகழ்வு பெரும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய நிலையில் ஓவரின் 5ஆவது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரி அடிக்கு முயற்சியில் இறங்கி வந்து விளையாடினார்.
ஆனால் அவர் பந்தை அடித்த கையோடு அவரது பேட்டும் கையை விட்டு விலகியதான் காரணமாக பந்து எதிர்பார்த்தை திசைக்கு மாறாக வேறு திசைக்கும் சென்றது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷஷாங்க் சிங் கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் காரணமாக ரிஷப் பந்த் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்தின் பேட்டிங் ஃபார்ம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் அந்தஸ்துடன் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொண்ட ரிஷப் பந்து இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் மொத்தமாகவே 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.