ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்நிலையில் இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை அக்ஸர் படேல் வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே தன்ஸித் ஹசன் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அக்ஸர் படேல் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டிற்காக காத்திருந்தார்.
அப்போது அக்ஸர் படேலின் ஹாட்ரிக் பந்தை ஜக்கார் அலி எதிர்கொண்ட நிலையில், அந்த பந்த அவரின் பேட்டில் பட்டு ஸ்லீப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச்சிற்கு சென்றது. ஒருகணம் ரோஹித் சர்மா பந்தை பிடித்தார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த கேட்ச்சை தவறவிட்டார். இதனால் அக்ஸர் படேலின் ஹாட்ரிக் கனவும் தகர்ந்தது. அதன்பின் தனது தவறை உணர்ந்த ரோஹித் சர்மா அக்ஸர் படேலிடம் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் ஜக்கர் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிர்லிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மெஹதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்ஸிம் ஹசன் சாகிப், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்.