பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்த கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Dec 26 2024 08:59 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸின் அதிரடியான தொடக்கத்தின் மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 112 ரன்களைக் குவித்தது. 

அதிலும் குறிப்பாக தனது அறிமுக ஆட்டத்தில் விளையாடிய சாம் கொன்ஸ்டாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 52 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் மொத்தமாக 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கொன்ஸ்டஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகிறார். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் உஸ்மான் கவாஜா நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை ஒரு விக்கெட்  இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது .

இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசி மிரளவைத்தார். அதன்படி இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே இருமுறை பும்ராவின் பந்துவீச்சுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டை விளையாடும் முயற்சியில் சாம் கொன்ஸ்டாஸ் தோல்வியைத் தழுவினார். மேலும் பும்ராவுக்கு எதிராக கொன்ஸ்டாஸின் ஷாட் தேர்வினால் மைதானத்தில் சிரிப்பலையும் எழுந்தது. 

ஆனால் தனது முயற்சியை கைவிடாத கொன்ஸ்டாஸ் இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரேம்ப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்து அசத்தினார். அதன்பின் பும்ரா வீசிய அடுத்த பந்தில் மீண்டும் ரேம்ப் ஷாட்டை விளையாடிய கொன்ஸ்டாஸ் சிக்ஸர் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏனெனில் இந்த தொடரில் பும்ரா பந்துவீச்சை அஸி வீரர்கள் எதிர்கொள்ள தடுமாறிய நிலையில் கொன்ஸ்டாஸ் முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அசத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அடுமட்டுமின்றி, 4483 பந்துகள் மற்றும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவுக்கு எதிராக சிக்ஸர் அடித்த வீரர் எனும் சாதனையையும் சாம் கொன்ஸ்டாஸ் படைத்துள்ளார். மேலும் இப்போட்டியில் பும்ராவின் 33 பந்துகளை எதிர்கொண்ட கொன்ஸ்டாஸ் 34 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்நிலையில் பும்ராவுக்கு எதிராக சாம் கொன்ஸ்டாஸ் சிக்ஸர் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை