டெம்பா பவுமாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 355 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதத்தின் மூலம் 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆகியோர் செய்த செயல் ஒன்று தற்போது பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்த போது இன்னிங்ஸின் 29ஆவது ஓவரை முகமது ஹொஸ்னைன் வீசினார். அப்போது சதத்தை நோக்கி விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா அந்த ஓவரின் 5ஆவது பந்தை பேக்வேர்ட் பாய்ன் திசையில் அடித்து ரன் ஓட முயற்சி செய்தார். ஆனால் அப்போது எதிர்திசையில் இருந்த மேத்யூ பிரீட்ஸ்கி ரன் ஓட மறுத்ததை அடுத்து பவுமா பாதியில் நின்றார்.
அச்சமயம் பந்தை பிடித்தை சௌத் ஷகீல் ஸ்டம்பை நோக்கி த்ரோ அடித்ததுடன் டெம்பா பவுமாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் ஏமாற்றமடைந்த பவுமா 82 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அப்போது ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி செல்ல முயன்ற பவுமாவை இடைமறித்த காம்ரன் குலாம் அவர் முன் ஆக்ரோஷமாக கொண்டாடினார். அவரைத் தொடர்ந்து சௌத் ஷகீலும் அதே பாணியில் பவுமாவை நோக்கி ஆக்ரோஷமாக கத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த டெம்பா பவுமாவும் பெவிலியன் செல்லும் போது உதவியற்றவராகத் தெரிந்ததுடன், அவர் அங்கேயே நின்று பாகிஸ்தான் வீரர்களின் இந்த மலிவான செயலைச் செய்ய போதுமான நேரம் கொடுத்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளானது. மேற்கொண்டு பாகிஸ்தான் வீரர்களின் இச்செயலை கள நடுவர்களும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.