தாலிபான்களுக்கு அதரவாக பேசிய அஃப்ரிடி!
ஆஃப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து, தலிபான்கள் ஆஃப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி ஓன்றை அளித்துள்ளது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
ஷாகித் அப்ரிடி அளித்த பேட்டியில், “தலிபான்கள் இந்த முறை சாதகமான, நேர்மறையான மனநிலையில்தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் விளையாட அனுமதித்ததுபோல், பெண்கள் பணிக்குச் செல்ல இந்த முறை தலிபான்கள் அனுமதிப்பார்கள், அரசியலில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் அனுமதிப்பார்கள். தலிபான்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல ஆதரவு தரக்கூடியவர்கள், அவர்கள் கிரிக்கெட்டை விரும்பக்கூடியவர்கள்” எனத் தெரிவித்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
தற்போது தாலிபான்களுக்கு ஆதரவாக ஷாகித் அஃப்ரிடி அளித்துள்ள பேட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.