கண்ணாடியுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்; டக் அவுட் ஆன பரிதாபம் - வைரல் காணொளி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தொடங்கிய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், ஷம்ஸ் முலானி - தனூஷ் கோட்டியான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனூஷ் கோட்டியான் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்தியா ஏ அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷம்ஸ் முலானி 89 ரன்களில் நடையைக் கட்ட, இந்தியா ஏ அணி 290 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத்ஹ் தொடங்கிய இந்தியா டி அணியில் அதர்வா டைடே 4 ரன்களிலும், யாஷ் தூபே 14 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், ரிக்கி பூஸ் 23 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்தியா டி அணி தற்போது வரையிலும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் படிக்கல் 60 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா டி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். ஏற்கனவே வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இனி அவரால் இந்திய டெஸ்ட் அணிக்குள் இடம்பிடிக்கவே முடியாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போதே வெளியின் தாக்கம் தெரியாமல் இருக்க கண்ணடி அணிந்து பேட்டிங்கை தொடர்ந்தார். ஆனாலும் அவரால் இப்போட்டியில் ஒரு ரன்னை கூட எடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்துள்ள நிலையில், அவரது செயலுக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லால் நடப்பு துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் அயர் தொடர்ந்து சொதப்பி வருவதும் அவரது கம்பேக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்த காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.