இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!

Updated: Fri, Oct 06 2023 13:09 IST
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா! (Image Source: Google)

பரபரப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தது. சீனாவின் ஹங்கொழு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜாகீர் அலி 24 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும் எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்து வங்கதேச பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய இளம் வீரர் திலக் வர்மா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசினார். அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து 9.2 ஓவரிலேயே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இதை தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக இந்தியா தயாராகியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 1 விக்கெட்டை எடுத்து பந்து வீச்சு அசத்திய திலக் வர்மா பேட்டிங்கில் 55 ரன்கள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதிலும் பேட்டிங்கில் 50 ரன்கள் தொட்ட போது தம்முடைய சட்டையை தூக்கி இடுப்பின் பக்கவாட்டு பகுதியில் மறைந்திருந்த உருவத்தை காண்பித்த அவர் பின்னர் வானத்தை நோக்கி கும்பிட்டு வித்தியாசமாக கொண்டாடியது ரசிகர்களுக்கு புரியாததாக இருந்தது.

இந்நிலையில் தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அத்துடன் இந்தியாவுக்காக ஆல் ரவுண்டராக வரவேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தவர்.

 

இதுகுறித்து பேசிய அவர், “அந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன். ஏனெனில் கடந்த சில போட்டிகளாக நான் சிறப்பாக செயல்படாமல் வீழ்ச்சியை சந்தித்தேன். மேலும் அந்த இடத்தில் என்னுடைய சிறந்த நண்பர் சமைராவையும் இணைத்துள்ளேன். வரும் போட்டிகளில் நான் பவுலராக முன்னேறி ஆல் ரவுண்டராக வருவதற்கு விரும்புகிறேன். அதற்காக நான் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை