ஐபிஎல் 2023: ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட விஜய் சங்கர்; வைரல் காணொளி!
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக சகா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில் சஹா 17 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு உள்ளே வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், ஷுப்மன் கில் 31 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தது. அடுத்து உள்ளே வந்த அபிநவ் மனோகர் விரைவாக 8 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட் ஆனார். மறுமுனையில் சாய் சுதர்சன் கடந்த போட்டியில் இருந்த பார்மை தொடர்ந்தார். 3 விக்கெட்டுகள் போனபின் உள்ளே வந்த விஜய் சங்கர், சாய் சுதர்சன் உடன் சேர்ந்து ஆடினார்.
இந்த நேரத்தில் சாய் சுதர்சன் அரைசதம் கடந்தார். அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தியிருக்கிறார். இவர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் அடித்திருந்த குஜராத் அணி 180-185 ரன்கள் எட்டுவதே கடினம் என எண்ணியபோது, 18ஆவது ஓவரில் 25 ரன்கள், 20ஆவது ஓவரில் 20 ரன்கள் அடிக்க, குஜராத் அணியின் ஸ்கொர் 200 கடந்தது.
இதில் விஜய் சங்கர் தனி ஆளாக நின்று 23 ரன்கள், 19 ரன்கள் முறையே 19ஆவது, 20ஆவது ஓவர்களில் அடித்துக்கொடுத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் சர்த்துல் தாக்கூர் பந்தை ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். இதனால் 21 பந்துகளில் அரைசதம் அடித்த விஜய் சங்கர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் நான்கு பவுண்டரிகள் உட்பட 63 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 குவித்தது குஜராத் அணி.