ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்! 

Updated: Thu, Jul 06 2023 22:29 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அணிகளுக்குள்ளையே 2 குழுக்களாக பிரிந்து இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி விளையாடி முடித்த பின் உணவு இடைவெளியில் இருந்து விராட் கோலி – ஷுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

அப்போது ரவீந்திர ஜடேஜாவை சிறப்பாக எதிர் கொண்டு தன்னுடைய ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி அடுத்ததாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் வீசிய பந்துகளில் பிளிக் ஷாட் அடித்து நல்ல தொடக்கத்தைப் பெற்றார். அதனால் சவாலை கொடுப்பதற்காக அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து வந்த உனட்கட் சற்று வெளியே பந்து வீசினார். அதை அடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே தடவிய விராட் கோலி எட்ஜ் வாங்கி 2ஆவது ஸ்லிப் ஃபீல்டரிடம் எளிதான கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கடந்த 2011இல் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்க விரும்பும் அவர் அவுட் சைட் ஆஃப் பகுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை வேண்டுமென்றே முன்னோக்கி சென்று எட்ஜ் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார்.

குறிப்பாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்விங் பந்துகளில் பெட்டி பாம்பாக அடங்கி கேரியரின் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி விமர்சனங்களை சந்தித்து அவரை அப்போதைய கேப்டன் தோனி ஆதரவு கொடுத்து காப்பாற்றினார். அதிலிருந்து முன்னேற்றத்தைக் கண்டாலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்த 3 வருட காலகட்டங்களில் பெரும்பாலும் அவர் அந்த ஷாட்டை அடித்தே அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை